சினிமாவை போன்று அரசியல் அல்ல என்பதை அத்துறையின் ஜாம்பாவான்களான , சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், டி.ராஜேந்தர், சரத்குமார், விஜயகாந்த் என விஜய்க்கு முன்னோடி நட்சத்திரங்கள் அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள்.
இதற்கு விதிவிலக்காக சினிமாவில் இருந்து அரசியல் வானில் ஜொலித்தவர்கள் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். கருணா நிதி, ஜெயலலிதா,பவன் கல்யாண். அந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும் அரசியலில் ஜொலிப்பாரா என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழ் நாட்டில் திராவிட அரசியல் கட்சிகள் தான் 50 ஆண்டுகள் ஆட்சியில் உள்ளன. இந்த திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி,தேமுதிக, நாம் தமிழர் கட்சி , மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் தோன்றின.

மேற்கூறிய கட்சிகள் பல ஆண்டுகள் இருந்தாலும்கூட நாம்தமிழர் கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் தேர்தலில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளன.
இந்த நிலையில், மற்றகட்சிகளின் கூட்டணி தயவில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளே ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளன.
இக்கட்சிகளுக்கு மாற்றாக தமிழ் நாட்டில் மாற்றம்வேண்டி நடிகர் கமல்ஹாசன் உருவாக்கிய மக்கள் நீதி மய்யம் தற்போது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார்.
தன் இலக்கு வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் என்று அறிவித்த நிலையில், இக்கட்சியின் கொடி அறிமுக விழா இன்று சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், தவெக தலைவர் விஜய், அவரது தாய், தந்தை, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவேக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் திரளாய் கலந்துகொண்டனர்.
அப்போது அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். இந்தக் கொடி சிவப்பு மற்றும் மஞ்சல் நிறத்தில் உள்ளது. அதில், இரண்டு பக்கம் போர் யானைகளும், நடுவில் வாகைப் பூ வைக்கப்பட்டுள்ளது.
இது தமிழ் நாட்டின் பூ ஆகும். இதைச் சுற்றி ஸ்டார்கள் உள்ளன. இக்கொடிபோர், வீரம்,தோழமை ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அக்கட்சியின் கொடி பாடலும் வெளியிடப்பட்டது.
இதில், விஜயின் அரசியல் வருகை பற்றிய கருத்துகளும், ஒருகறை இல்லாத கையைப் புடிச்சு போகப் போறோம் என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது.
அப்பாடலின் வரிகள்…
’’வெற்றிக் கழக கொடியேறுது, மக்கள் ஆசை நிஜமாகுது…
தமிழன் கொடி பறக்குது தலைவன் யுகம் பொறக்குது’’
என்று ஆரம்பிக்கும் வரிகள் அடுத்து, அண்ணா, எம்.ஜி.ஆர் போன்று மூணெழுத்து மந்திரத்தை அதாவது விஜயின் பெயரை மீண்டும் காலம் ஒலிக்குது என்று குறிப்பிடும் படி உள்ளது.
சிருசும் பெருசும் ரசிக்குது….சிங்கப் பெண்கள் சிரிக்குது என்ற வரிகள் அவரது சினிமாவில் பிரபலத்தையும் தமிழக பெண்கள் வீரப் பெண்மணிகள் என்று குறிப்பிடும்படி உள்ளது.
அதன்பின்,
’’மக்களோட தொப்புள் கொடியும், மொளச்ச கொடியும் பறக்குது.
மனசில் மக்களை வைக்கும் தலைவன் வரும் நேரம் இது…
மக்களும் அவன மனசில் வச்சு ஆடிப்பாடி கூப்பிடுது…..
சிகரம் கெடச்ச பின்னும் இறங்கி வந்து சேவை செஞ்சு
நீங்க கொடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலமிது’’
என்று விஜய் இத்தனை ஆண்டுகள் தன்னை சினிமாவில் வளர்த்துவிட்டு ரசித்த மக்களுக்கு நன்றிகூறும் விதமாய் அரசியலில் இறங்கி சேவை செய்வதாக குறிப்பிடுவதாக வரிகள் உள்ளன.

நடிகர் விஜய் இதற்கு முன் தமிழ் நாட்டை ஆண்ட அண்ணா, எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் போல் அவரும் தமிழ் நாட்டை ஆளுவதாக இப்பாடலில் வரிகள் வருவது அவரது நம்பிக்கையைக் காட்டுகிறது.
அதற்கு அவர் எத்தனை தூறம் அரசியலில் பயணிக்கப் போகிறார்…மக்களின் நம்பிக்கையைப் பெறப் போகிறார்….இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில், அடுத்த சட்டசபை தேர்தல் நடைபெறும் எத்தனை கோடி மக்களின் மனங்களை வெல்லப் போகிறார் என்பதைப் பொறுத்து அவரது கனவும் பலிக்க வாய்ப்புண்டு.
எத்தனையோ அரசியல் தலைவர்களை அரியாசனத்தில் அமர்த்திய மக்களுக்கு தெரியும்! தங்களுக்கான தலைவர் யார் என்பது!இதை விஜய்யும் உணர்ந்து செயல்பட்டால் நிச்சயம் அவர்தேர்ந்தெடுத்த வாகைப் பூவைப் போல் தமிழ்நாடு அரசியலிலும் வெற்றி வாகை சூட வாய்ப்புள்ளது.


