என் அனுபவத் தேர் ஊர்ந்து செல்கிறது…
தமிழ் வாசகர்களுக்கு என் முதல் நாவல் இது.
இந்தச் சமுதாயத்தின் மூலம் எனக்கு ஏற்பட்ட தாக்கங்களும் அதனால் நான் பெற்ற பரீட்சயங்களுடன்கூடிய பாடங்களும் இந்நாவலில் (நான் சந்தித்த நிகழ்வுகள் ) வெளிப்பட்டிருக்கும்.
என் மனதுக்கு ஆட்பட்ட கருத்துகளுக்கு வெளிச்சமிட்டுக் காண்பிக்க நினைத்து இங்கே கற்பனைத் தூரிகையால் எழுத்துக் கோலமிட்டுள்ளேன்.
சமூகத்தில் இருந்து நான் பெற்றுக்கொண்டதை இந்தச் சமூகத்திற்கே நான் திரும்பக் கொடுத்திருக்கிறேன்… என் எழுத்தின் வழியே இப்படைப்பின் மூலம் .
சினிமாவில் ஒரு நடிகருக்குப் பின்னணியில் பாடும் பாடகரைப் போன்று என் கட்டுரைகளை இந்தக் கதையின் நாயகன் பார்வையில் அவன் எழுவதைப்போல் முன்வைத்துள்ளேன்.
இது வாசகர்களுக்குப் புதிய வாசிப்பு அனுபவத்தைத் தரலாம் என்பது என் கருத்து.
இதன் மூலமாக நான் ஏதும் புதிய முயற்சி செய்ததாகக் கூறவில்லை; எனக்கு முன்னமே இம்முறை தோன்றியிருக்கலாம் என்றாலும்கூட, இந்நூலை வாசிப்பவர்களுக்குப் புதிதாய் ருசி இருக்கும் என்று நினைக்கிறேன்.
தினசரி என் அலுவலகப் பணிநேரம் ஒன்பதரை மணி போக…என் அன்றாடச் சுய அலுவல்கள் போக, மீதமுள்ள நேரங்களில் தொடர்ச்சியான எழுத்துப் பணியால் பதினான்கு நாட்களில் இந்நூலை எழுதி முடித்தேன்.
இதை எழுதிமுடிக்கும் வரை நான் புகழேந்தியாகவே மாறிவிட்டேன். அத்துடன் அவன் இயல்புகள் என்னைத் தாக்கியது. ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுக்குள்ளும் நான் ஊடுபாவியிருக்கிறேன் என்பதால் இந்நூலை எழுதிமுடிக்கும் வரை என் மனம் அடைந்த சித்ரவதைகளுக்கு அளவேயில்லை.
’காதல் தோல்விக்குப் பிறகு ஒரு வாழ்க்கை இருக்கும் என்பற்கும், எல்லாம் இழந்த பிறகும் வாழ்க்கை இன்னும் நம்பிக்கையின் பிடியில்தான் உள்ளது என்பதற்கும் இந்நாவலில் வரும் கதாப்பாத்திரங்களே உண்மைச்சாட்சி.’
உலகில் மனித வாழ்க்கை என்பது ஒருவருக்கொருவர் பெறும் வாய்ப்பு,வசதிகளைப் பொருத்து மாறுபடும்! அவர்களின் அனுவங்களில்தான் ஒட்டுமொத்த இலக்கியக் கதைகளும் பல்வகைப்பட்ட மொழிகளில் கட்டமைக்கப்பட்டுப் படைக்கப்படுகின்றன.
அதுபோல் மனிதவாழ்க்கை என்பது ஒரு சுழல் சக்கரம் தான். அது எப்போது அம்மிக்கல்போல் ஒரே கிடையில் இருக்காது.
அதற்கு இந்நாவலின் கதாப்பாத்திரங்கள் எல்லோரும் உயிர்ப்பானதொரு அத்தாட்சி.
பரந்த நேசங்களுடன்
சினோஜ்