’’ ஓடி வந்தால் விழுந்துவிடப் போகிறார்கள் என்று கருதி, மெதுவாக வாங்க என்று கைகாட்டி பேசினேன். அதற்கு நான் தூய்மைப் பணியாளர்களை தொடக்கூடாது தள்ளி நில்லுங்கள்’’ என்று கூறியதாக தவறாக சித்தரித்துள்ளனர் என்று நடிகை ரோஜா விளக்கம் அளித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். அப்போது அவருடன் செல்ஃபி எடுக்க தூய்மை பணியாளர்கள் நெருங்கி வந்தபோது, அவர்களை தள்ளி நிற்கச் சொன்னதாக சர்ச்சை கிளம்பியது.
இந்த சம்பவம் தொடர்பாக தூய்மை பணியாளர்களை ரோஜா அவமதித்துவிட்டதாக பலரும் கண்டித்தனர்.
இதற்கு நடிகை ரோஜா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
’’நான் திருச்செந்தூர் கோவிலில் கணவருடன் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது, நிறைய பேர் செல்ஃபி எடுக்க முயன்றனர். தூய்மை பணியாளரும் செல்ஃபி எடுக்க வந்தனர். கோவில் தரைதளம் தாழ்வாக இருந்ததால், அவர்கள் ஓடி வந்தால் விழுந்துவிடப் போகிறார்கள் என்று கருதி, மெதுவாக வாங்க என்று கைகாட்டி பேசினேன். அதற்கு நான் அவர்களை தொடக்கூடாது தள்ளி நில்லுங்கள் என்று கூறியதாக தவறாக சித்தரித்துள்ளனர் ’’என்று தெரிவித்துள்ளார்.