
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர்-கீழ உப்பிலிக் குண்டு சாலையில் இயங்கி வந்த தனியார் கல்குவாரியில் வெடி விபத்து ஏற்பட்டது.
பாறைகளை உடைக்கப் பயன்படுத்தும் வெடி மருந்துகளை குவாரி அருகே உள்ள அறையில் இறக்கியபோது திடீரென்று மருந்துகள் வெடித்துச் சிதறின.
இவ்விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலியாகினர். 2 வாகனங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் செல்ல முடியாமல் இருந்தனர்.
இந்த வெடிவிபத்தினால் அப்பகுதியைச் சுற்றிலும் 20 கிலோ மீட்டர் தூரம் வரை அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகளும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:
“விருதுநகர் மாவட்டம் டி.கடம்பன்குளத்தில் இயங்கி வந்த தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் இன்று காலை ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில், அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும்” என மாண்புமிகு முதலமைச்சர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.