
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல் வீசியவர் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அம்மாநில காவல்துறை அறிவித்துள்ளது.
ஆந்திரம் மாநிலத்தில் நேற்று முன் தினம் பிரசாரம் மேற்கொண்டபோது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை அடையாள தெரியாத நபர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் அவர் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது.
இதில், ஆந்திராவில் 175 தொகுதிகள் கொண்ட சட்சபைக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆந்திரம் மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டி, நேற்று முன் தினம் பிரசாரம் மேற்கொண்டபோது, அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதில், முதல்வர் ஜெகன் மோகனின் இடது புருவத்தில் கடும் காயம் ஏற்பட்டது. அப்போது, பிரசார பேருந்தில் இருந்த மருத்துவர்கள் அவருக்கு உடனடி முதலுதவி செய்தனர். முதல்வருக்கு அருகில் இருந்த எம்.எல்.ஏ வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தை அடுத்து, நேற்று ஜெகன் மோகன் ரெட்டி பிரசாரம் மேற்கொள்ளவில்லை. ஒரு நாள் ஓய்விற்குப் பின்னர், இன்று மீண்டும் பிரசாரத்தை தொடங்கினார்.
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியவர் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில்,ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல் வீசியவர் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அம்மாநில காவல்துறை அறிவித்துள்ளது.