
வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த சம்பவம் நடந்து, கிட்டத்தட்ட ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், தேர்தலை புறக்கணிப்பதாக வேங்கைவயல் மக்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாஜக தலைவரும், கோயம்புத்தூர் வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது:
’’ஒட்டு மொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்து, கிட்டத்தட்ட 16 மாதங்கள் கடந்து விட்டன. ஆனால், இதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யாமல், கண்துடைப்பு விசாரணை நடத்தி, கிட்டத்தட்ட அந்த சம்பவத்தைப் பொதுமக்கள் பார்வையில் இருந்து மறைக்க முயற்சித்து வருகிறது திமுக அரசு. இதனைக் கண்டித்து, வேங்கைவயல் மக்கள், தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
வெறும் வாய்வார்த்தைகளில் மட்டும் சமூகநீதி பேசி, இத்தனை ஆண்டுகளாகப் பட்டியல் சமூக மக்களை ஏமாற்றி வரும் திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலும், கையாலாகாத்தனமுமே இதற்கு ஒரே காரணம். வேங்கைவயல் சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் கடந்தும், அங்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு ஆறுதல் கூறக் கூட மனமில்லாமல் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். பட்டியல் சமூக மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பார்க்கும் திமுகவுக்கு, சமூகநீதி என்ற வார்த்தையை உச்சரிக்க என்ன தகுதி இருக்கிறது?
வாக்களிப்பது குடிமக்களின் ஜனநாயக உரிமை. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து, தேர்தலைப் புறக்கணிக்கவிருப்பதாக வேங்கைவயல் மக்கள் அறிவித்திருப்பது, மிகவும் வருத்தத்திற்குரியது. வேங்கைவயல் மக்கள், மாற்றத்திற்காக வாக்களிக்க முன்வர வேண்டும். தங்கள் வாக்குகளின் வலிமையை திமுக அரசுக்கு உணர்த்துவதுதான் உண்மையான பதிலடியாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
#EditedbySinoj
மேலும் இதுபோன்ற செய்திகளுக்கு @cineyukam இணையதளப் பக்கத்தையும் இதன் Social Media pages-ஐயும் follow செய்க.