
மறு அறிவிப்பு வெளியாகும் வரை இந்தியர்கள் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் நாடு இஸ்ரேல் மீது குற்றம் சாட்டியது.
இதனால் ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
எனவே விரைவில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், இந்தியர்கள் யாரும் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளதாவது:

தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இஸ்ரேல் மற்றும் ஈரானில் வசித்து வரும் இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகங்களைத் தொடர்பு கொண்டு தங்கள் இருப்பிடத்தைப் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தியர்கள் தங்கள் பாதுகாப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வெளியில் செல்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும், இஸ்ரேலை ஈரான் விரைவில் தாக்கும் என தான் எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல் தெரிவித்துள்ளார்.
எனவே ’’ஈரானிய தாக்குதலில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்கக் அமெரிக்கா முழு அர்ப்பணிப்புடன் உதவும் ஈரான் அதில் வெற்றி பெறாது’’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.