
நேற்று முன்தினம் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு சினிமாத்துறைக்கும், அரசியலுக்கும், தமிழ் நாட்டிற்கும் பேரிழப்பு என்று அனைவரும் கூறி வருகின்றனர்.
நேற்று அவருக்கு தமிழ்நாடு அரசு முழு அரசு மரியாதையும் அவருக்கு செலுத்தப்பட்டு, அவரது பூத உடல் சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் விஜயகாந்தின் கம்பீரம், அவரது ஆளுமை, நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தது, எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்தது என அவரைப் பற்றியும் அவரது செயலை பற்றியும் அவர் ஆற்றிய உதவிகள் பற்றியும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகரும், தொழிலதிபருமான நெப்போலியன் விஜயகாந்த் பற்றி கூறியுள்ளதாக புளூ சட்டைமாறன் தெரிவித்துள்ளார்.
அதில் ”கார்கில் நிதி திரட்ட மதுரையில் திரைக்கலைஞர்கள் பலர் கலை நிகழ்ச்சி நடத்தினோம். அதற்கு விஜயகாந்த் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி முடிந்து கடைசி ரயிலை பிடித்து அவர், நான் உட்பட சுமார் 200 பேர் சென்னைக்கு திரும்பிக்கொண்டு இருந்தோம். :
நேரம் இரவு 10 மணியை தாண்டிவிட்டது. பலர் சாப்பிடாமல் இருந்தார்கள். அடுத்து வரும் ஸ்டேஷனில் வண்டியை 10 நிமிடமாவது நிற்க வைத்து விடுங்கள். அதற்குள் நான் அனைவருக்கும் உணவு வாங்கி வந்துவிடுகிறேன் என்றார்.
‘பரவாயில்லை. ஒருவேளை சமாளித்து கொள்ளலாம்’ என நான் சொன்னதற்கு ‘என்னை நம்பி வந்தவர்களை பட்டினி போடுவது தவறு’ என்றார்.
நான் ரயில் ஓட்டுனரிடம் சென்று நிலைமையை கூறினேன். வண்டி நின்றது. தன்னுடன் சிலரை அழைத்துச்சென்று அங்கிருந்த சிறு உணவகங்களில் 200 பேருக்கு தேவையான டிபன் ஐட்டங்களை எப்படியோ வாங்கி வந்து விட்டார்.
மனித நேயம் என்றால் அவர்தான்.”என்று தெரிவித்துள்ளார்.