
விஜயகாந்தின் நினைவிடத்தில் 24 மணி நேரமும் பூஜைகள் செய்யப்படும் எனவும், பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து நேரில் அஞ்சலி செலுத்தலாம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் காலமானார்.
இதையடுத்து, நேற்று காலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்ட விஜயகாந்த் உடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, மாலை, கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கேப்டன் என்று பொறிக்கபப்ட்ட ஒரு சந்தனப் பேழையில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்தின் இறுதி நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள் உதய நிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
லட்சக்கணகான மக்களும் மண்டபத்திற்கு வெளியே சாலைகளில் நின்று இந்த நிகழ்ச்சியை எல்.இ.டி திரையில் பார்த்தனர்.
இந்த நிலையில், இன்று பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

அதில், மறைந்த விஜயகாந்திற்கு நேரிலும், தொலைபேசி வழியாகவும் இரங்கல் கூறிய அனைவருக்கும் தலைவணங்கி நன்றியைக் கூறிக் கொள்கிறேன். தமிழ் நாடு அரசிடம் விஜயகாந்திற்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை வைத்திருக்கிறோம். நிச்சயம் செய்து கொடுப்பார்கள் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 24 மணி நேரமும் நினைவிடத்தில் பூஜைகள் செய்யப்படும் எனவும், பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து நேரில் அஞ்சலி செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.