
தமிழ் சினிமாவில் 80,90 களில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். சினிமாவில் பல சில்வர் ஜூபிளி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனியிடம் பிடித்தவர்.
அவர் அரசியலில் கால்பதித்து, தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய பின்னர் நடைபெற்ற தேர்தலில் நடிகர் வடிவேலு அவருக்கு எதிராக கடுமையான பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், பதிலுக்கு விஜயகாந்த் எந்த மேடையிலும் ஒருவார்த்தை கூட வடிவேலுவை பற்றி குறிப்பிட்டு பேசவில்லை.
இந்த நிலையில், எந்த காரணத்திற்காக வடிவேலு, விஜயகாந்தை எதிர்த்தார் என்று புளூ சட்டைமாறன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
250 ரூபாய் சம்பளத்திற்கு சின்ன கவுண்டரில் நடிக்க வந்தார் வடிவேலு. விஜயகாந்திற்கு குடைபிடித்தபடி செல்லும் வேடம். அவருக்கு புதிய துணிமணிகளை எடுத்து தந்தான் என் நண்பன் விஜயகாந்த்.
ஒருநாள் விஜயகாந்தின் வக்கீல் இறந்துவிட்டார். அவரது வீடு சாலிகிராமத்தில் வடிவேலுவின் வீட்டிற்கு எதிரே இருந்தது. துக்கம் விசாரிக்க வந்த சிலர் வடிவேலுவின் வீட்டருகே வண்டிகளை பார்க் செய்திருந்தார்கள்.
இதைக்கூட பொறுத்துக்கொள்ளாத வடிவேலு ‘என் வீட்டு பக்கம் ஏன் வண்டியை நிறுத்தறீங்க? வண்டியை எல்லாம் எடுங்க’ என கோவமாக சத்தம் போட்டார்.
‘ஏம்ப்பா… சாவு வீட்டுக்கு வந்தவங்க கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாங்க. அது வரைக்கும் பொறுத்துக்க கூடாதா? இப்படி கொச்சையா பேசறியே… இது நியாயமா?’ என விஜயகாந்தின் நண்பர்கள் சிலர் கேட்டனர். ஆனால் வடிவேலு அதை கேட்கவில்லை.
இதனால் அங்கே களேபர சூழல் ஏற்பட்டது.
உடனே எனக்கு போன் செய்து ‘விஜயகாந்த் ஆட்கள் என்கிட்ட வம்பு இழுக்கறாங்க’ என்று புகார் செய்தார். பிறகு இந்த விஷயம் முதல்வராக இருந்த கருணாநிதியும் காதுக்கும் சென்றது.
விஜயகாந்தை பழிவாங்க திமுகவிற்கு வடிவேலு பிரச்சாரம் செய்ததற்கு இந்த சம்பவம்தான் காரணம் – நடிகர் தியாகு, விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் என்று தெரிவித்துள்ளார்.
நேற்று விஜயகாந்த் இறந்த செய்தியை கேள்விப்பட்டு, நேரில் சென்று உணர்ச்சிவசப்பட்டு தியாகு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.