
தமிழ்த்திரையுலகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பிரமாண்டமாக நடக்கவுள்ளது. இந்த விழா வரும் டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளதால், மூத்த நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களுக்கு நேரில் சென்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அழைப்பிதல் வழங்கியது.
இந்த விழாவில் தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல்வேறு இந்திய சினிமா பிரபலங்களும் பங்கேற்கின்றனர்.
எனவே அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள் ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த விழாவில் கலந்துகொள்ளவுள்ளதால் இந்த விழா சென்னை-சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இதே நாளில்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் என்பதால் இந்த விழாவை ஏன் இந்த நாளில் கொண்டாட வேண்டும்? என அதிமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி கூறியுள்ளதாவது:
‘’கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி தமிழ் திரையுலகம் சார்பாக #டிசம்பர்_24 அன்று நடைபெறுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 24 முன்னாள் முதல்வரும், நடிகர் சங்கம் உருவாக முக்கியமானவர்களில் ஒருவராகவும் இருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள்.
ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவுநாளில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை வீட்டு வாசல் மற்றும் தெருமுனைகளில் வைத்து, அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், பாடல்களை ஒலிபரப்பியும் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்துவார்கள்.
அதே நாளில் கலைஞர் நூற்றாண்டு விழா என்று கலை நிகழ்ச்சி நடத்துவது ஏன்?’’ என்று தெரிவித்துள்ளார்.