
விஜயகாந்துக்கு மூச்சு விடுவதில் லேசான சிரமம் இருப்பதால் அவருக்கு செயற்கை சுவாசம் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருவதாக வதந்திகள் பரவிய நிலையில் தேமுதிக தலைமை கழகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் 80,90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் சினிமாவில் வெற்றி பெற்றதை அடுத்து, தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கி, அரசியலில் களமிறங்கி, எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார்.
சமீபகாலமாக உடல் நலக்குறைவால் கட்சிக் கூட்டங்களில், பிரசாரங்களில் அதிகம் கலந்துகொள்ளாத விஜயகாந்த் வீட்டில் மருத்துவர்களில் ஆலோசனைபடி ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று உடல் நலகுறைவு காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இவரது உடல்நலம் பற்றி ஊடகங்கள் பல்வேறு வதந்திகள் பரப்பி வரும் நிலையில்,
இதுகுறித்து தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
‘’தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர்கள் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.
செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்பவேண்டாம்.
இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும்வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம் ‘’ என்று தெரிவித்துள்ளது.